தாய்லாந்து-5 ஆண்டுகளில் 59 பதக்கங்கள்… தடகளத்தில் மிரளவைக்கும் 103 வயது முதியவர்!
சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பார்கள். ஆனாலும் இந்த வயதே ஒரு சாதனை என்று நிரூபித்திருக்கிறார் 103 வயது முதியவர்.
20 வயதிலேயே தற்போது நிறைய பேர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை நோய் என பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதை காண்கின்றோம். இந்நிலையில் இந்த முதியவர் 103 வயதில் தடகள வீரராய் களம் இறங்கி இதுவரை 59 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?. அதுவும் வெறும் ஐந்து ஆண்டுகளில் இத்தனை பதக்கங்களையும் வென்று நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் தாய்லாந்தைச் சேர்ந்த தடகள வீரர் 103 வயதுடைய ஸ்வான்ங் ஜான்பிரம்.
தனது 97 வயது வயதில் தடகளப் பயிற்சியைத் தொடங்கிய இவர், முதல் தொடரிலேயே மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் 59 முறை தங்கம் வென்றுள்ளார்.
குண்டு எறிதலில் ஆசிய சாதனையை முறியடித்துள்ள இவர், “இந்த வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியாகவும்,பெருமையாகவும் இருக்கிறது. எனது நெருங்கிய நண்பர் உடல் நலக்குறைவால் சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அது என் மனதை மிகவும் காயப்படுத்தி விட்டது. அப்போதுதான் முடிவு செய்தேன் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று. தினமும் உடற்பயிற்சி, அதிகாலையில் வாக்கிங் மற்றும் ஜாக்கிங் போவது, காய்கறி, பழங்கள் அவித்த முட்டை வேகவைத்த உணவுகளை மட்டுமே உண்பேன். குறிப்பாக இரவில் சீக்கிரமாக தூங்கி விடுவேன், காலையில் சரியான நேரத்தில் எழுந்து விடுவேன்.
நான் வாழும் கடைசி நாள் வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. என்னைப் பொறுத்தவரை மன உளைச்சல் இல்லாமல்,ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான உடற்பயிற்சி, இயற்கையான காற்று ஆகியவற்றுடன் வாழும் பொழுது மனதிற்கும், உடலுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தரும். இதை நான் கொள்கையாகவே கடைபிடிக்கிறேன். இதுவே என் ஆரோக்கியத்தின் ரகசியம்” என்று கூறியுள்ளார்.