சிங்கப்பூர் வாடகை வீடுகளில் இருந்த நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
சிங்கப்பூர் வாடகை வீடுகளில் இருந்த சுமார் 400 குடும்பங்கள் புதிய வீடுகளுக்குச் சென்றுள்ளன.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் இடமாற்றத் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பழைய குடியிருப்புப் பேட்டைகளைப் புதுப்பிப்பதற்கான திட்டத்தின் ஓர் அங்கமாக அவர்கள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் சிறந்த வீடுகளையும் வசதிகளையும் சிங்கப்பூரர்களுக்கு வழங்கவேண்டும் என்பது அந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
எடுத்துக்காட்டாக, தோ பாயோ லோரோங் 5இல் வாடகை வீடுகள் கொண்ட புளோக்குகள் 29, 31இன் குடியிருப்பாளர்கள் திட்டத்தின்படி கடந்த ஆண்டு மே மாதம் புதிய வீடுகளுக்கு மாறினர்.
அதற்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2,500 வெள்ளி வழங்கப்பட்டது. முதல்முறை வீடு வாங்குவோர் மானியம் பெற்றனர். வேறு சிலருக்கு பிடாடாரி போன்ற வட்டாரங்களில் வாடகை வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் தெரிவு கொடுக்கப்பட்டது.
மறுமேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் புதிய வாடகை வீடுகளைக் கட்டவிருக்கிறது. வாடகைக்குக் குடியிருந்தவர்களில் பலர் முதியோர்.
வீடுமாறுவது குறித்து அவர்களில் பலருக்குக் கேள்விகள் இருந்ததாகக் கூறப்பட்டது. வீடமைப்பு வளர்ச்சிக் கழக அதிகாரிகள் மூத்தோருக்கு உதவினர். தொண்டூழியர்களும் சமூக சேவை அமைப்பினரும் குடியிருப்பாளர்களின் தேவைகளை அறிந்து இடம் மாறுவதற்கு உதவிவருகின்றனர்.