இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கீகாரமிக்க கடவுச்சீட்டு வழங்கி வைப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலில் இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கு உலக அங்கீகாரமிக்க கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்து அகதி வாழ்க்கை வாழ்ந்துவரும் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இதன்போது 200 அகதி விண்ணப்பதாரர்களுக்கு இலங்கை அகதிகளுக்கு உலக அங்கீகாரமிக்க கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் போது இந்திய மண்ணை நம்பி தஞ்சம் புகுந்த வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் இலங்கைக்குத் திரும்புவதாயினும் வெளிச்செல்லும் அனுமதி அட்டைகள் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலைமையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு சென்ற போது, அவரது வழிகாட்டுதலின் கீழ், இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும்வகையில் வரலாற்றில் முதல்தடவையாக சர்வதேச அங்கீகாரமிக்க கடவுச்சீட்டுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் புனர்வாழ்வு/அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு அனைத்து நாட்டு பாஸ்போர்ட்டுகளை வழங்க இலங்கை அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதன் பொருள் அனைத்து நாடு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இந்தியாவிலிருந்தே எந்த நாட்டு விசாவிற்கும் விண்ணப்பிக்கலாம். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடந்த வருடம் ஜூலை மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதுவரை, 3,500க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டியுள்ளனர் மற்றும் 900 விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது. இம்முயற்சியின் முக்கியத்துவம் என்னவெனில், முதன்முறையாக, இலங்கை அரசாங்கம், இந்த முயற்சியின் கீழ், இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்குத் தேவையான ஆவணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில், தமிழ்நாட்டில் மீள்குடியேறியுள்ள இலங்கைப் பெற்றோருக்கு கடவுச்சீட்டு வழங்குவது குறித்து பரிசீலித்துள்ளது.