குஜராத்தில் ஏரியில் படகு கவிழ்ந்ததில் 12 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் பலி
குஜராத்தின் வதோதரா நகரின் புறநகரில் உள்ள ஏரியில் படகு கவிழ்ந்ததில் 12 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நியூ சன்ரைஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலாவுக்குச் சென்றபோது, பிற்பகல் ஹர்னி ஏரியில் இந்த சோகம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
படகில் 23 மாணவர்கள் மற்றும் நான்கு ஆசிரியர்கள் அடங்கிய 27 பேர் இருந்ததாகவும், படகின் கொள்ளளவை விட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், படகில் லைப் ஜாக்கெட்டுகள் எதுவும் இல்லை.
4 பேரை காணவில்லை என்றும், அந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“வதோதராவில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்ததில் உயிர் இழந்ததால் துயரம் அடைந்துள்ளேன். துயரத்தின் இந்த நேரத்தில் எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி X இல் பதிவிட்டுள்ளார்.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. PMNRF-ல் இருந்து தலா ₹ 2 லட்சம் கருணைத் தொகையாக இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ₹ 50,000 வழங்கப்படும்,” என்று பிரதமர் மேலும் கூறினார்.