ரயிலில் பயணிகள் மீது தாக்குதல்; வைரல் வீடியோவால் டிக்கெட் பரிசோதகர் மீது அதிரடி நடவடிக்கை!
ரயிலில் டிக்கெட் இன்றி பயணித்ததாக பயணிகளை அடித்து தாக்கிய டிக்கெட் பரிசோதரின் வீடியோ வைரலானதை அடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
பரவுனி-லக்னோ விரைவு ரயில் உத்தரபிரதேசத்தின் கோண்டா மற்றும் பராபங்கி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது பிரகாஷ் என்பவர் டிக்கெட் பரிசோதராக அந்த ரயிலில் பணியில் இருந்தார். ரயிலில் பயணித்த சில இளைஞர்கள் உரிய பயணச்சீட்டு இன்றி பயணித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை டிக்கெட் பரிசோதகர் பிரகாஷ் கடுமையாக தாக்கினார்.
இதை அந்த பெட்டியில் பயணம் செய்த சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும், வீடியோவை பதிவு செய்தவரையும் பிரகாஷ் அடிப்பதற்காக கையை ஓங்கி உள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
உரிய பயணச்சீட்டு இன்றி பயணித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இருப்பினும் பயணிகள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார். ரயில்வே துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பிரகாஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
https://twitter.com/i/status/1747880733815791625