அஸ்வெசும திட்டம் தொடர்பில் வெளியான தகவல் : புதிதாக இணைத்துக்கொள்ளப்படவுள்ள 03 இலட்சம் பேர்!
7 இலட்சம் நிவாரண மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர், மேலும் 03 இலட்சம் குடும்பங்கள் புதிதாக நிவாரணத்தை பெற தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் 5000 குடும்பங்கள் தகுதியற்றவை என பணவியல், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அஸ்வசும நலன்புரி திட்டம் தொடர்பாக 640,000 ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக மூன்று இலட்சம் குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சில் இன்று (18.01) நலன்புரி நன்மைகள் சபையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நிவாரணப் பலன்களைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த தவணை தொகை வழங்கப்படுவதற்கு முன்னர், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான தவணைகள் விரைவில் வங்கிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை நிவாரணம் பெற்றுக் கொண்டிருந்த 5,209 குடும்பங்கள் தகுதியற்றவர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 2,567 குடும்பங்கள் தாங்கள் பெறும் சலுகைகளின் மட்டத்திலிருந்து கீழே சென்றுள்ளதாகவும், மேலும் 50,882 பேர் தமது நன்மை மட்டத்தை உயர்த்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏறக்குறைய 11 இலட்சம் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றை விரைவில் பரிசீலித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.