நடுவானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; வாக்குவாதத்தில் விமான பெண் பணியாளரை கடித்த பயணி!
ஜப்பானிலிருந்து அமெரிக்காவுக்கு பயணித்துக் கொண்டிருந்த விமானம் ஒன்றில், பயணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெண் விமான பணியாளரை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்திலிருந்து, அமெரிக்காவின் சியாட்டில் நகருக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் மீண்டும் டோக்கியோ விமான நிலையத்திற்கு திரும்பி உள்ளது. இதையடுத்து விமான நிலையத்தில் தயாராக இருந்த பொலிஸார், விமானத்தில் பயணித்த அமெரிக்க பயணி ஒருவரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, ”விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் திடீரென விமான பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை சமாதானப்படுத்த முயன்ற பெண் ஊழியர் ஒருவரை அந்த பயணி திடீரென கடித்துள்ளார். இதையடுத்து விமானத்தை மீண்டும் டோக்கியோ விமான நிலையத்திற்கே விமானி கொண்டு வந்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அந்தப் பயணி ஏன் அவ்வாறு நடந்து கொண்டார்? அவரது பெயர் என்ன? என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தில் பெண் ஊழியருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விமான பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பயணிகள் விமான ஊழியர்களை கடிப்பது இது முதல் முறை அல்ல. 2022ம் ஆண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் விமானங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
அப்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம், அந்த பயணிகளுக்கு தலா 81,950 மற்றும் 77,272 டொலர்கள் அபராதமாக விதித்திருந்தது. இந்த ஆண்டில் ஜனவரி 3ம் திகதி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், டெக்சாஸ் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது, பயணி ஒருவர் விமான பணிப்பெண் மற்றும் காவலர் ஒருவரை முகத்தில் குத்தியதில் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.