Smartphone இனி தேவையில்லை.. அறிமுகமாகும் Rabbit தொழில்நுட்பம்
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று சமீபத்தில் லாஸ் வேகாசில் நடந்த CES 2024 நிகழ்வில், அவர்களின் ராபிட் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தனர்.
அதாவது அந்நிறுவனம் பார்ப்பதற்கு சிறிய அளவில் உள்ள கருவி ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறினர். மேலும் அதன் பயன்பாடுகள் என்னென்ன என்பதையும் காணொளியாக விளக்கி காண்பித்த அவர்கள், இந்த கருவி மூலமாக நாம் என்ன சொல்கிறோமோ அதை செய்ய வைக்க முடியும் என்றனர். ஏற்கனவே இதுபோன்ற வசதிகளை மற்ற நிறுவனங்கள் அறிமுகம் செய்திருந்தாலும், அவை வெறும் பாடல் கேட்பதற்கும், நமக்கு வேண்டிய பதில்களைக் கொடுப்பதற்குமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த புதிய ரேபிட் சாதனம், அதையும் தாண்டி எக்கச்சக்க வேலைகளை செய்கிறது.
அதாவது இந்த சிறிய வகை கருவியிடம் “அலுவலகத்தில் இருந்து எனக்கு வீட்டிற்கு செல்ல ஒரு கார் புக் செய்ய வேண்டும்” எனக் கூறினால் போதும், அதுவே எல்லா வேலைகளையும் இணையத்தில் செய்து நீங்கள் இருக்கும் இடத்திற்கு காரை புக் செய்து வர வைக்கும். அதேபோல உங்களுக்கு ஏதாவது உணவு தேவை என்றாலும் அந்த சாதனத்திடம் கூறினால் போதும் அதுவே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ளும். மேலும் உங்களது நண்பர்களுக்கு மெசேஜ் ஏதாவது அனுப்ப வேண்டும் என்றாலும் அதையும் இந்த குட்டி சாதனத்திடம் சொல்லலாம்.
இந்த சாதனம் நம்முடைய குரலுக்கு கட்டுப்படுவது மட்டுமின்றி, இதில் 360 டிகிரி கோணத்திற்கும் திரும்பக்கூடிய கேமரா உள்ளது. அதைக் கொண்டு நம்மைச் சுற்றியுள்ளவற்றை இந்த சாதனத்தால் பார்க்க முடியும். கேமராவைப் பயன்படுத்தி இந்த சாதனத்திற்கு உங்கள் சமையலறையில் உள்ள காய்கறிகளைக் காட்டி இதை வைத்து என்ன சமையல் செய்யலாம் எனக் கேட்டதும், அதுவே பல கணக்கீடுகள் செய்து, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புகளை வழங்கும்.
அதேபோல இந்த சாதனத்திற்கு நீங்களாகவே புதிய வேலைகளையும் கற்றுக் கொடுக்கலாம் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சாதனம் இன்னும் எல்லா மக்களும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்படவில்லை என்றாலும் இந்திய மதிப்பில் இதன் விலை 16,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சாதனத்தில் சிறிய ரக டிஸ்ப்ளே, கேமரா, ஸ்பீக்கர் மற்றும் 1000mAh பேட்டரி, 4 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. அதே நேரம் வைபை ப்ளூடூத் போன்ற வசதிகளுடன் சிம் கார்டு பொருத்தி பயன்படுத்தும் வசதியும் உள்ளது. இது விற்பனைக்கு வரப்போகிறது என்ற அறிவிப்பு வந்த சில மணி நேரங்களிலேயே, இதை வாங்குவதற்காக மக்கள் முன்பதிவு செய்யத் தொடங்கி விட்டனர். இது ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.