விரிவடைந்து செல்லும் போர்… இஸ்ரேலின் உளவு மையம் மீது ஏவுகணைத் தாக்குல் நடத்திய ஈரான்
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், இஸ்ரேலின் ’மொசாட்’ உளவு மையத்தின் மீது நேரடியாக ஏவுகணைத் தாக்குதலை ஈரான் மேற்கொண்டுள்ளது. இதனால் காசாவுக்குள் நிலைகொண்டிருக்கும் இருந்த போர், மத்திய கிழக்கில் மேலும் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்குள் அத்துமீறி புகுந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர் சுமார்1200க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த அக்.7 கோர நிகழ்வுக்கு பழிவாங்க இஸ்ரேல் சபதமிட்டது. அதன்படி காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் 100 நாட்களை கடந்துள்ளன. ஹமாஸ் அமைப்பினரை பூண்டோடு அழிப்பது, அவர்கள் இஸ்ரேலில் இருந்து கடத்திச் சென்ற பிணைக்கைதிகளை மீட்பது என இரு பிரதான நோக்கங்களுடன், காசாவை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் சிதைத்து செய்து வருகின்றன.
காசா ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவாக எகிப்திலுள்ள ஹிஸ்பொலா மற்றும் சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் தொடுத்து வந்தனர். ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு சகலத்திலும் உதவியாக இருந்து வந்தபோதும், ஈரான் தேசம் நேரடியாக போரில் ஈடுபடவில்லை; அது தவிர்த்து ஆயுதங்கள், உணவுகள், பயிற்சி, மருந்துகள் என சகலத்தையும் காசா ஆயுதக் குழுவினருக்கு வழங்கி வருகிறது. இந்த சூழலில் தற்போது இஸ்ரேலுக்கு எதிரான நேரடித் தாக்குதலில் ஈரான் இறங்கியிருப்பது மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக விளங்கும் குர்திஸ்தானில் அமைந்துள்ள மொசாட் உளவு அலுவலகம் மீது ஈரான் நேரடித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு, தங்களுக்கு எதிராக உளவுத் தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருவதாகவும், இது ஈரானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகி வருவதாகவும் ஈரான் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இதனிடையே, ஈராக் குர்திஸ்தானின் தலைநகரான அர்பிலில் அமைந்துள்ள ’ஓர் உளவுத் தலைமையகம் மற்றும் ஈரானுக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்களின் கூட்டம்’ ஆகியவற்றை தாக்கி அழித்ததாக ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் இஸ்ரேல் உளவு அதிகாரிகள், அவர்களுக்கு ஆதரவளித்த ஒரு தொழிலதிபர் உட்பட பலர் இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அப்பால் சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானுக்கு எதிரான பயங்கரவாத குழுக்களின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. முன்னதாக கெர்மன் மற்றும் ராஸ்கில் ஆகிய சம்பவங்களில் ஈரானியர்கள் கொல்லப்பட்டதற்கான பதிலடி நடவடிக்கை என இதனை ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதிலும் மொசாட் மீதான தாக்குதல், இஸ்ரேலுக்கு எதிரான நேரடித் தாக்குதலுக்கு இணையானது என்பதால், இஸ்ரேல் – அமெரிக்கா ஒன்றிணைந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈரானுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட வாய்ப்பு உருவாகி உள்ளது. மத்திய கிழக்கில் காசா போர் அதனை எல்லைகளை பரப்பி வருவது, உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.