இலங்கை கிரிக்கெட்ட மீதான தடையை நீக்க ஐசிசி பச்சைக் கொடி
இலங்கை கிரிக்கெட் மீதான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதித்துள்ள தடை பிப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த ICC இன் தலைமை செயல் அதிகாரி Geoff Allardice உடனான ஆக்கபூர்வமான கலந்துரையாடலின் பின்னர் ICC தடை நீக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஐசிசி குழு திருப்தியடைந்துள்ளதாகவும், அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் இலங்கை மீதான தடையை நீக்குவதற்கு பச்சைக்கொடி காட்டியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஐசிசி பிரதிநிதிகள் குழு இலங்கையின் விளையாட்டு சாசனம் பற்றி அறிந்திருப்பதாக கூறிய அமைச்சர், ஐசிசி நடத்தை விதிகளுக்கு இணங்க விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தற்போதைய விளையாட்டு அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு சுற்றுலா அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.