லண்டனில் யாழ் – காரைநகரை சேர்ந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி
தென்மேற்கு லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் Twickenham பகுதியில் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்தவர் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திங்கட்கிழமை இரவு இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில் திங்கட்கிழமை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இளைஞன் ரயிலில் பயணிக்கும் போது பின்னால் வந்தவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் Twickenham பகுதியில் உள்ள ஸ்ட்ராபெரி ஹில் ரயில் நிலையத்திற்கு பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார் வரழைக்கப்பட்டனர்.
இதன் போது 21 வயதான இளைஞன் பலத்த காயத்துடன், கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தின் போது 16 வயது சிறுவன் ஒருவன் காலில் கத்திக்குத்து காயத்துடன் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் யாழ்ப்பாணம் – காரைநகரை சேர்ந்தவர்கள் எனவும் லண்டனில் தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தம்பதியின் 3 பிள்ளைகளில் மூத்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் குறித்த இளைஞனின் அடையாளத்தை பொலிஸார் இதுவரையில் ஊடகங்களில் வெளியிடவில்லை.
இது ஒரு இளைஞனின் சோகமான மரணத்தை ஏற்படுத்திய ஒரு அர்த்தமற்ற வன்முறைச் செயல் என உயர் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது மற்றும் நாங்கள் எங்கள் விசாரணைகளைத் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.