இலங்கை முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்கள் பணிபகிஸ்கரிப்பு!
கிளிநொச்சி வைத்தியசாலையின் சுகாதார பரிசோதகர்கள் பணிமனையிலும், அனைத்து குடும்ப சுகாதார சேவை அலுவலகங்களிலும் இன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களுக்கு DAT கொடுப்பனவு 35000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படாமையை கண்டித்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பணியாளர்கள், வைத்தியர்களுக்கு 50000 உயர்த்தப்பட்டாலும் நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல.
ஆனால் அதற்காக எங்களிடம் கொடுக்கப்பட்ட .3000 ரூபாய் மட்டும் அப்படியே உள்ளது என தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மருத்துவ அதிகாரிகளுக்கு உயர்த்தப்பட்ட கொடுப்பனவுடன் ஒப்பிடுகையில், தங்களின் கொடுப்பனவையும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து , இடைக்கால மருத்துவ கூட்டுப் படை வாரியம் வரும் 12 ஆம் திகதிவரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் அவசரகால சேவைகளுக்கு மட்டுமே உதவி செய்ய முன்வருவதாக அவர்கள் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வவுனியா பொதிவைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்றையதினம் பணிக்கு சமூகமளிக்காமையினால் வைத்தியசாலையின் சேவைகள் பல ஸ்தம்பிதமடைந்திருந்தது.
குறிப்பாக பெறுமதிசேர் வரி அதிகரிக்கப்பட நிலையில் தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கபடவில்லை எனவே, அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போராட்டகாறர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச்சுகாதார பரிசோதகரகள் பற்சிகிச்சை நிபுணர்கள், மருந்து கலவைகள் நிபுணர்கள், ECG தொழில்நுட்ப நிபுணர்கள், EEG தொழில்நுட்ப நிபுணர்கள், கண் மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.