சூர்யகுமார் யாதவ் ஐபிஎல்லில் விளையாடுவது சந்தேகம்?
இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தற்போது வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பிரச்சனை காரணமாக சூர்யகுமார் யாதவுக்கு குடலிறக்கத்துக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம் தான் எனவும் புதிய தகவல்கள் பரவி வருகிறது.
கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பீல்டிங் செய்துகொண்டிருந்த போது அவருக்கு காயம் ஏற்பட்டது. கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உடனடியாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். பிறகு ஓய்வெடுக்கவேண்டும் என்பதால் அவர் வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 போட்டியில் விளையாடமாட்டார் என கூறப்பட்டது.
இதனையடுத்து, அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதும் சந்தேகம் தான் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஏனென்றால், சூர்யகுமார் யாதவுக்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது மட்டுமின்றி தற்போது அவருக்கு ஹெர்னியா என்கிற குடலிறக்க பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளாராம். இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஹெர்னியா என்கிற குடலிறக்க பிரச்சனையால் சூர்யகுமார் யாதவ் குடலிறக்கத்துக்கான அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறாராம். தற்போது சூர்யகுமார் யாதவ் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள சூர்யகுமார் யாதவ் ஜெர்மனி செல்ல இருக்கிறாராம்.
இந்த அறுவை சிகிச்சையை அவர் மேற்கொண்டால் கண்டிப்பாக 2 மாதங்களுக்கு மேலாக அவர் ஓய்வெடுக்கவேண்டு இருக்குமாம். எனவே, இதன் காரணமாக அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது என்பது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும், சூர்யகுமார் யாதவ் போல ஹர்திக் பாண்டியா வும் காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் விளையாடுவது சந்தகேம் தான் எனவும் தகவல்கள் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.