4 வயது மகனைக் கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற பெங்களூரு பெண் அதிகாரி!!
கோவாவில் 4 வயது மகனை கொலை செய்த பெங்களூரு பெண் அதிகாரி, தற்கொலைக்கும் முயன்றது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெங்களூருவில் வசிக்கும் சுசனா சேத் என்பவர் 4 வயது மகனுடன் சனிக்கிழமையன்று கோவாவில் தங்கியிருந்தார். நேற்று அறையைக் காலி செய்தவர், ஹோட்டல் நிர்வாகத்தினர் உதவியோடு பெங்களூருக்கு வாடகை கார் ஏற்பாடு செய்தார். காரில் 12 மணி நேரப் பயணம் என்பதால், ஒன்றரை மணி நேரமே ஆகும் விமானப் பயணத்தை ஹோட்டல் நிர்வாகத்தினர் பரிந்துரை செய்தபோது அதனை சுசனா மறுத்துள்ளார்.
அவர் கிளம்பியதும் அறையை சுத்தம் செய்த பணியாளர்கள், அங்கு ரத்தக்கறையை கண்டதும் பொலிஸாருக்குத் தகவல் தந்தனர். சுசனா சேத் பயணித்த வாடகைக்கார் ஓட்டுனரை செல்போனில் தொடர்புகொண்ட பொலிஸார், சுசனா சந்தேகிக்காத வகையில் கொங்கணி மொழியில் விசாரித்தனர். பின்னர் வழியில் தென்படும் காவல் நிலையத்தில் சுசனாவை ஒப்படைக்குமாறு கார் டிரைவருக்கு உத்தரவிட்டனர்.
அந்த வகையில் கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஐமங்கலா காவல் நிலையத்தில் காரை டிரைவர் செலுத்தினார். அங்கிருந்த பொலிஸார் சுசனா சேத்தை வளைத்ததோடு, அவர் வசமிருந்த கனத்த சூட்கேஸையும் கைப்பற்றினர். அதனை திறந்து பார்த்தபோது சுசனாவின் 4 வயது மகன் சடலம் இருந்தது. ஹோட்டலில் 4 வயது மகனைக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து சுசனா சேத் எடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
தொடர்ந்து கோவா பொலிஸார் வசம் சுசனா சேத் ஒப்படைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர் செய்து 6 நாள் பொலிஸ் காவலுக்கு அனுமதி பெற்ற பொலிஸார் சுசனாவிடம் விசாரணையை தொடர்ந்துள்ளனர். மேற்கு வங்கம் கொல்கத்தாவை பூர்விகமாக கொண்ட சுசனா சேத், தனது பணி நிமித்தம் கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் தங்கியுள்ளார். செயற்கை நுண்ணறிவு துறையில் வெற்றிகரமான ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வரும் சுசனாவின் கணவரும் அதே துறையை சேர்ந்தவர்.
இருவரும் கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. சுசனா சேத் எதிர்பார்த்ததற்கு மாறாக விவாகரத்து தீர்ப்பு அமையும் என கருதியதால் மகனைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள கோவாவில் முயற்சித்திருக்கிறார். ஆனால் மகனை கொன்ற பிறகு, அவர் மேற்கொண்ட தற்கொலை முயற்சி தோல்விகரமாக அமைந்தது. எனவே மகன் சடலத்துடன் பெங்களூரு புறப்பட்டிருக்கிறார்.
ஹோட்டல் அறையில் தென்பட்ட ரத்தக்கறை, தற்கொலைக்காக தன்னுடைய கையைக் கிழிக்கும்போது உருவானது என சுசனா சேத் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இந்தோனேஷியாவின் ஜகர்தாவுக்கு சென்றிருக்கும் சுசனாவின் கணவர் திரும்பியதும் அவரிடமும் விசாரணை நடத்த கோவா பொலிஸார் முடிவு செய்துள்ளனர். பொலிஸ் காவலில் உள்ள சுசனா சேத், 6 நாள் விசாராணையில் அளிக்கப்போகும் தகவல்கள் குற்றப் பின்னணியை முழுவதுமாக தெளிவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.