வெள்ளை மாளிகையின் நுழைவு வாயிலில் மோதிய கார்: சதிச்செயல் காரணமா?
அமெரிக்க வெள்ளை மாளிகை நுழைவு வாயிலின் மீது கார் பயங்கரமாக மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது விபத்தா அல்லது சதிச்செயல் காரணமா என சாரதியிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வசிக்கும் வெள்ளை மாளிகையானது உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சம் கொண்டுள்ள கட்டடமாகும். அங்கு 24 மணி நேரமும் பொலிஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பாதுகாப்பு வளையத்தை மீறி நேற்று மாலை கார் ஒன்று வெள்ளை மாளிகையை நோக்கி வந்துள்ளது. பின்னர், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென வெள்ளை மாளிகை வெளிப்புற நுழைவு வாயிலின் மீது அந்த கார் பயங்கரமாக மோதியது.
இதைக் கண்டதும் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, காரை ஓட்டி வந்த சாரதியை மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவம் நடந்தபோது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை. அவர் வெளியூரில் சுற்றுப்பயணத்தில் இருந்தார்.
எனவே, இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது சதிச்செயலில் ஈடுபடும் நோக்கத்தில் கார் மோதப்பட்டதா என்பது குறித்து, அதிகாரிகள் சாரதியிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.