பிரேசிலில் லொரி மீது சுற்றுலா பேருந்து மோதி பயங்கர விபத்து: 25 பேர் பலியான சோகம்!
பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான பாஹியாவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பஸ், லாரி மீது மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
பிரேசிலின் பஹியாவில் உள்ள நோவா பாத்திமா – கவியாவோ நகரங்களுக்கு இடையிலான ஃபெடரல் சாலையில் நேற்று இரவு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற மினி பஸ்சும், லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, மீட்புப் பணியில் ஈடுபட்ட உள்ளூர் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய இரு வாகனங்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்துள்ளன.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பாஹியா போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணி மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் பெரும்பாலானோர் மினி பஸ்சில் வந்தவர்களே என பாஹியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து எவ்வாறு நேரிட்டது என்பது உடனடியாக தெரியவரவில்லை. இருப்பினும் விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். விபத்தில் 25 பேர் வரை உயிரிழந்ததைத் தொடர்ந்து ஜாகோபினா நகராட்சி மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.