போட்டோ ஷூட் எடுக்க பெற்றோர் எதிர்ப்பு… BBA மாணவி எடுத்த விபரீத முடிவு!
மாலில் போட்டோ ஷூட்டுக்குச் செல்ல பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் மின்விசியில் BBA மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சுதாநகரைச் சேர்ந்தவர் வர்ஷினி(21). இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் வர்ஷினி, BBA படித்து வந்தார்.
பெங்களூருவில் உள்ள ஒரு மாலில் போட்டோ ஷூட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தனது பெற்றோரிடம், வர்ஷினி நேற்று அனுமதி கேட்டார். ஆனால், மாலில் போட்டோ ஷூட்டுக்கு அனுப்ப அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வர்ஷினி மனவருத்தம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் இன்று வர்ஷினி அறைக்கு அவர் தாய் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த மின்விசியில் தூக்கிட்டு வர்ஷினி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால் அவர் கதறி அழுதார்.இதுகுறித்து தகவல் அறிந்த வில்சன் கார்டன் பொலிஸார் விரைந்து வந்து வர்ஷினியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பெங்களூரு மத்தியப் பிரிவு காவல் துறை துணை ஆணையர் சேகர் கூறுகையில், ” பெங்களூரில் உள்ள ஒரு மாலில் போட்டோ ஷூட் செய்ய பெற்றோரிடம் வர்ஷினி அனுமதி கேட்டுள்ளார். போட்டோஷூட்டுக்காக மாலுக்குச் செல்ல அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக வர்ஷினி நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
போட்டோ ஷூட்டுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் பிபிஏ மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.