பாக்.வேட்புமனு தாக்கலிலும் விளையாடும் அரசியல்… பின்னடைவில் இம்ரான்கான்-முன்னிலையில் நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த இரு மனுக்களையும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
பாகிஸ்தான் அரசியல் களத்தில் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் புதிய பின்னடைவை சந்தித்துள்ளார். அடுத்தாண்டு அங்கு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறையில் இருந்தபடி அவர் தாக்கல் செய்த இரு மனுக்களையும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.
71 வயதாகும் இம்ரான்கான் 2022 ஏப்ரலில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது முதல், தொடர்ச்சியான அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களில் சிக்கியுள்ளார். 2018 முதல் 2022 வரை பதவியில் இருந்தபோது அவர் இழைத்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு வழக்குகளில் அவர் சிறையில் முடக்கப்பட்டுள்ளார். அரசு பரிசுகளை உரிமையாக்கியது முதல் அரசின் ரகசியங்களை கசிய விட்டு ஆதாயம் அடைந்தது வரையிலான அந்த குற்றச்சாட்டுகளில் சிக்கி, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லாகூர் தொகுதியில் போட்டியிட தாக்கலான மனு, அந்தத் தொகுதியின் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இம்ரான் கான் இல்லை என்பதோடு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதன் அடிப்படையிலும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அவரது மனுவை நிராகரித்தது.
இதே காரணத்தின் அடிப்படையில் இம்ரானின் சொந்த ஊரான மியான்வாலியில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இம்ரான்கான் மட்டுமல்ல அவரது கட்சியின் துணைத் தலைவரான ஷா மெஹ்மூத் குரேஷி உட்பட சில மூத்த தலைவர்கள் சமர்ப்பித்த வேட்பு மனுக்களையும் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இதற்கிடையே, இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. சில வாரங்களுக்கு முன்னதாக நவாஸ் மீதான இரு ஊழல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. எனினும் பொதுப்பதவியில் இருப்பதற்கு எதிரான வாழ்நாள் தடை உள்ளிட்ட சில வழக்குகளின் விசாரணைகள் நீதிமன்றத்தில் உள்ளபோது, நவாஸின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது தொடர்பாக இம்ரான்கானின் பிடிஐ கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இம்ரான் கானின் இரு மனுக்களும் நிராகரிக்கப்பட்டது அவரது கட்சியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இம்ரானின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது மற்றும் நவாஸ் ஷெரீப்பின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆகியவை தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடவும் அவர்கள் தயாராகி வருகின்றனர்.