தனிப்பட்ட தகவல்களை ஆக்கிரமித்த Google – வழக்கைத் தீர்ப்பதற்கு இணக்கம்
Google பயனர்களின் தனியுரிமையை ஆக்கிரமித்ததாகக் கூறி அமெரிக்க வழக்கைத் தீர்ப்பதற்கு Google ஒப்புக்கொண்டது.
தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான வழக்கை முடித்துக்கொள்ள Google நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தொடுத்தவர்கள் குறைந்தது 5 பில்லியன் டொலர் தொகையை இழப்பீடாகக் கேட்டிருக்கின்றனர்.
கண்காணிப்பின்றி இணையத்தைப் பயன்படுத்துவதற்கான தளத்தைக் கொண்டு சம்பந்தப்பட்ட பயனர்கள் இணையத்தை உபயோகித்ததாக நம்பப்படுகிறது.
அப்படியிருந்தும் அவர்களின் இணைய நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கண்காணிப்பின்றி இணையத்தைப் பயன்படுத்துவதற்கான Googleஇன் ‘Incognito’ முறை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளது.
‘Incognito’ முறையைப் பயன்படுத்தும்போது Google, இணைய நடவடிக்கைகளைக் கண்காணிக்காது என்ற தவறான தகவல் தங்களுக்குப் புகட்டப்பட்டதாக வாதிகள் கூறினர்.
ஆனால், இம்முறையைப் பயன்படுத்துவோரின் இணைய நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது Google ஊழியர்களுக்கிடையே பகிரப்பட்ட மின்னஞ்சல்களில் தெரிய வந்தது.
இந்த வழக்கில் அந்த மின்னஞ்சல்கள் முன்வைக்கப்பட்டன. இணையப் பயன்பாடு தொடர்பான போக்குகளை அறியவும் இணைய விளம்பர விற்பனைக்காகவும் பயனர்களின் இணைய நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டதாக வழக்கில் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலில் 2020ல் தொடரப்பட்ட இந்த வழக்கை முடித்துவைப்பதற்கான முதற்கட்ட ஒப்பந்தத்தை கூகலின் வழக்கறிஞர்கள் வரைந்துள்ளதாக நீதிபதி உறுதிப்படுத்தினார்.