காதுக்குள் வலை பின்னிய சிலந்தி … இங்கிலாந்து ஆசிரியைக்கு நேரிட்ட அதிர்ச்சி அனுபவம்
இங்கிலாந்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு, அவரது காதுக்குள் வலை பின்னிய குட்டி சிலந்தி காரணமாக நேர்ந்த கசப்பான அனுபவம் இணையத்தை உலுக்கி வருகிறது.
29 வயதாகும் லூசி வைல்ட் 3 குழந்தைகளின் தாயாவார். பகுதி நேரமாக பள்ளி ஆசிரியை ஆகவும், முழு நேரமாக கன்டென்ட் கிரியேட்டராகவும் பணி புரிந்து வருகிறார். அண்மையில் அவர் தனது காதில் சில தொந்தரவுகளை அடையாளம் கண்டார்.நாளாக அந்த தொந்தரவின் வீரியம் அதிகரிக்கவே, காதுகளை சுத்தம் செய்யும் எலெக்ட்ரானிக் உபகரணத்தின் உதவியை நாடினார். ஸ்மார்ட்பட் எனப்படும் அந்த உபகரணம், காதுகளை சுத்தம் செய்ய உதவுவதோடு, அதன் நுனியில் பொருத்தப்பட்ட கேமரா உதவியோடு காதின் உட்புறத்தை ஆராயவும் உதவக்கூடியது.
மேற்படி ஸ்மார்ட்பட் வாயிலாக ஆராய்ந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காதுக்குள் ஒரு பூச்சி களேபரம் செய்வதையும், கேமரா உதவியோடு அதனை குட்டி சிலந்தி என்றும் லூசி வைல்ட் கண்டறிந்தார். கைவைத்தியமாக வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெயை காதில் வார்த்ததில், அந்த எட்டுக்கால் பூச்சியை வெளியேற்றினார்.அதன் பிறகு மருத்துவரை சந்தித்ததில், அவர் இனிமேல் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்று ஆறுதல் தந்து, பெயருக்கு சில நோயெதிர்ப்பு மருந்துகளுடன் வழியனுப்பி வைத்தார். ஆனால், லூசிக்கான காது பிரச்சினை அத்தோடு தீரவில்லை.
மீண்டும் காதுக்குள் சங்கடங்களை எதிர்கொள்ள ஆரம்பித்தார். வழக்கம்போல ஸ்மார்ட்பட் வாயிலாக ஆராய்ந்ததில் கருப்பு நிற பிசிறான பொருளை அடையாளம் கண்டு அதிர்ந்து போனார். காதில் சேரும் அழுக்குக்கு மாறாக வித்தியாசமாக தென்பட்ட அந்த பொருளை கண்டுகொண்டதும், அவசரமாக தனது காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் ஓடினார்.அங்கே அவருக்கு சிக்கலான சிகிச்சை முறையில் காதுக்குள் அடைந்து கிடந்ததை வெளியேற்ற முயன்றார்கள். இன்னொரு பிரசவ வலிக்கு இணையான சிரமத்தை எதிர்கொண்டதாக அது குறித்து வர்ணிக்கும் லூசி வைல்ட், அவரது காதில் மருத்துவர்கள் கண்டெடுத்த பொருள் சிலந்தி வலை என்றதும் கிறுகிறுத்துப் போனார்.
காதுக்குள் சிலந்தி எப்படி செல்லும், அப்படி சென்றது எதற்காக காதின் உட்புறத்தில் வலை கட்டும்… என்பது லூசி வைல்ட் மட்டுமல்ல, அவரை பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் புரியவில்லை.லூசி இப்போதெல்லாம் கூடுமானவரை காதுகளை மூடியவாறே நடமாடுகிறார். நேரம் கிட்டும்போதெல்லாம் ஸ்மார்ட்பட் மூலமாக காதுகளை ஆராய்ந்து வருகிறார். மீண்டும் சிலந்தி காதுக்குள் நுழையுமோ, வலை பின்னுமோ என்ற அச்சத்தில் அவரது அன்றாடம் கழிந்து வருகிறது.