சியோலில் ஹமாஸ் தாக்குதல் நடத்தினால்… இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட சர்ச்சை வீடியோ!
தென்கொரியாவில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி, பிணையக்கைதிகளை பிடித்து செல்வது போல் சித்தரித்து, இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியதால், உடனடியாக அது நீக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் அமைப்பினர் காஸா பகுதியில் நடத்தி வரும் போர், சுமார் 2 மாதங்களை கடந்துள்ள நிலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதற்கு பல்வேறு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த போதும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு காரணமாக, இஸ்ரேல் போரை தொடர்ந்து வருகிறது. இதனிடையே தென்கொரியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் தென்கொரிய தலைநகர் சியோலில் புகுந்து, பெண்ணிடமிருந்து, அவரது மகளை பறித்து இழுத்து பிணையக்கைதியாக பிடித்து செல்வது போன்றும், சியோலில் வெடிகுண்டுகள் வெடிப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இது போன்று உங்களுக்கும் நடந்தால் பிரச்சினையின் வீரியம் தெரியும்’ என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தென்கொரியா மற்றும் சியோல் நகர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வீடியோவால் மக்களிடையே பதற்றம் ஏற்படக்கூடும் என்பதால், உடனடியாக அதனை நீக்க வேண்டும் என தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்ரேல் தூதரகத்திற்கு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அந்த வீடியோவை இஸ்ரேல் தூதரகம் நீக்கியுள்ளது. இருப்பினும் இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.