நிஜ்ஜார் கொலை வழக்கில் இருவரை கைது செய்ய கனடா முடிவு… இந்தியாவுடனான உறவில் மீண்டும் விரிசல் ஏற்படும் அபாயம்
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைவழக்கில், இரு சந்தேக நபர்களை கைது செய்ய கனடா பொலிஸ் முன்வந்துள்ளது. இது கனடா – இந்தியா உறவில் மேலும் உரசலை ஏற்படுத்தும் என கனடா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 18 அன்று கனடாவின் சர்ரே நகரில் உள்ள ஒரு குருத்வாராவிற்கு வெளியே, காலிஸ்தானி பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். கனடா குடியுரிமை பெற்ற நிஜ்ஜாரின் கொலையை அந்நாடு தீவிரமாக அணுகியது. இந்திய ஏஜெண்டுகள் சிலர் நிஜ்ஜார் படுகொலையின் பின்னிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து கனடா – இந்தியா இடையே உரசல் எழுந்தது. தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவது முதல் விசா நடைமுறைகள் வரை இந்த உரசல் வலுத்தது. கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தபோதும், உலக அரங்கில் இதனை கனடா பெரிய விவகாரமாக்கியது.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள மற்றொரு காலிஸ்தான் பிரிவினைவாதியை இந்தியாவுடன் தொடர்புடைய நபர்கள் கொல்ல முயன்றதாக கடந்த மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. பிரிவினைவாதி பெயரை அமெரிக்க அதிகாரிகள் அறிவிக்காதபோதும், அவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பது வெளிப்படையானது.
இந்தியாவை சங்கடத்தில் தள்ளியிருக்கும் இவற்றின் மத்தியில், தற்போது நிஜ்ஜார் கொலை வழக்கில் இரு நபர்களை கனடா பொலிஸார் கைது செய்ய இருப்பதாகவும், அவர்கள் வெளிநாடு தப்ப முடியாது தடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னரே கைது செய்து மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருவதை, தாமதமாக அறிவிக்க இருக்கிறார்களா அல்லது புதிதாக கைது நடவடிக்கை பாய்ச்ச இருக்கிறார்களா என்பதில் தெளிவில்லை.
ஆனால், நிஜ்ஜார் கொலை குற்றச்சாட்டில் ஆதாரம் கேட்டுவரும் இந்தியாவுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை அமையும் எனத் தெரிய வருகிறது. இதனால் இந்தியா – கனடா இடையிலான உரசல் மீண்டும் தலைதூக்க வாய்ப்பாகி உள்ளது. கூடவே, அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைக்கு எதிரான கொலைச்சதி குற்றச்சாட்டிலும் இந்தியாவை நெருக்கடிக்கு ஆளாக்க இந்த கனடா கைதுகள் காரணமாகக் கூடும்.