பிரதமர் நெதன்யாகு மேஜைக்கு அடியில் ‘டைம் பாம்’; ஈரான் ராணுவம் வெளியிட்ட வீடியோ!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மேஜைக்கு அடியில் டைம் பாம் வைத்து, அவரை படுகொலை செய்யும் அனிமேஷன் வீடியோ ஒன்றினை ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ளது.
சிரியாவில் செயல்படும் ஐஆர்ஜிசி என்னும் ஆயுதக் குழுவின் ஆலோசகராக சையத் ராஸி மௌசவி என்பவர் விளங்கி வந்தார். ஐஆர்ஜிசி கொட்டத்தை அடக்கும் நோக்கில், வான்வழித் தாக்குதல் ஒன்றின் மூலமாக அண்மையில் மௌசவி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேலை பழிதீர்ப்போம் என்ற செய்தியுடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிரான அனிமேஷன் வீடியோ ஒன்றை ஐஆர்ஜிடிசி மற்றும் ஈரான் ராணுவத்தினர் சமூக ஊடக தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
நெதன்யாகு தனது அலுவலக அறையில் அமர்ந்திருப்பதை அவர் முதுகுப்புறமிருந்து காட்டுவதுடன் அனிமேஷன் வீடியோ தொடங்குகிறது. அப்படியே நகர்ந்து சென்று நெதன்யாகுவின் மேஜைக்கு கீழே மறைந்திருக்கும் டைம் பாம் ஒன்றையும், அதில் கண்சிமிட்டும் கவுண்ட் டவுன் நேரத்தையும் பதிவு செய்திருக்கும் வீடியோ, கவுண்ட் டவுன் முடியும்போது வீடியோவும் முடிகிறது.
Media outlets affiliated with Iran’s IRGC on Tuesday released an animated video depicting the assassination of Israeli Prime Minister Benjamin Netanyahu, amid vows by Iranian officials to avenge the Israeli killing of top IRGC general Razi Mousavi. pic.twitter.com/2tWIidRidm
— Iran International English (@IranIntl_En) December 27, 2023
இந்த வீடியோவின் மூலம், மௌசவி படுகொலைக்கு பழி தீர்க்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கொல்வோம் என்ற மிரட்டலை ஐஆர்ஜிசி மற்றும் ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் மூலமே மௌசவி கொல்லப்பட்டதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.முன்னதாக, ஈரான் ராணுவ ஜெனரலான காசிம் சுலைமானியின் நெருங்கிய நண்பராக மௌசவி விளங்கி வந்தார். 2020-ல் ஈராக்கில் நடைபெற்ற அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல் மூலமாக சுலைமானி கொல்லப்பட்டார். சுலைமானி கொலைக்கு பழி தீர்ப்பேன் என மௌசவி சூளுரைத்திருந்தார்.
தனது நோக்கத்தை ஐஆர்ஜிசி ஆயுதக்குழு வாயிலாக தீர்க்க மௌசவி திட்டமிட்டிருந்தார். இதன் பொருட்டு ஈரான் ராணுவம் மற்றும் ஐஆர்ஜிசி இடையே சிறப்பான ஒருங்கிணைப்பை மௌசவி மேற்கொண்டிருந்தார். ஆனால் மௌசவியின் நோக்கம் ஈடேறும் முன்னரே அவரை வான்வழித் தாக்குதல் வாயிலாக இஸ்ரேல் கொன்றுள்ளது. இதற்கு பதிலடி தரும் நோக்கில் நெதன்யாகுவுக்கு எதிரான படுகொலை அச்சுறுத்தல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.