ரோஹித் சர்மா 5 ரன்னில் அவுட் … ரபாடா புதிய சாதனை
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா புதிய சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ரோஹித் 14 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ரோஹித் விக்கெட்டை ரபாடா வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவை அதிக முறை ஆட்டமிழக்கச் செய்த பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரபாடா பெற்றுள்ளார்.
இதற்கு முன் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி இந்த பெருமையை பெற்று இருந்தார். தற்போது வலது கை வேகப்பந்து வீச்சாளர் ரபாடா டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட் என மொத்தம் 13 முறை ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி ரோஹித் சர்மாவை ஒட்டுமொத்தமாக 12 முறை ஆட்டமிழக்கச் செய்து பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் (10 முறை), நாதன் லயன் (9 முறை), டிரென்ட் போல்ட் (8 முறை) ஆகியோர் ரோஹித் விக்கெட்டை வீழ்த்தி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இன்று இந்தியா -தென்னாபிரிக்கா இடையே பாக்சிங் டே டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளனர். தென்னாப்பிரிக்கா அணியில் ரபாடா 5 விக்கெட்டையும், நந்த்ரே பெர்கர் 2 விக்கெட்டையும் பறித்தனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவை அதிக முறை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளர்கள்:
13 – ககிசோ ரபாடா
12 – டிம் சவுத்தி
10 – ஏஞ்சலோ மேத்யூஸ்
9 – நாதன் லயன்
8 – டிரென்ட் போல்ட்