திருகோணமலை: 18 வயது இளைஞன் மீது பெற்றோர் தாக்குதல்! பின்னணியில் வெளியான காரணம்
திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 18 வயது இளைஞனை பிடித்து தாக்கி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று இன்று (26) பதிவாகியுள்ளது.
கிண்ணியா சூரங்கள் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய பாடசாலைக்குச் செல்லும் மாணவி ஒருவரை நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் காதலித்து திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றபோது சிறுமியின் பெற்றோர்கள் அழைத்துச் சென்ற இளைஞனை தாக்கிய நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த இளைஞர் சிறுமியை குருநாகல் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குறித்த இளைஞரையும் சிறுமியையும் விசாரணை செய்தபோது சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சிறுமியின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதைடுத்து இளைஞனை தாக்கியதாகவும் தெரிய வருகின்றது.
இதே வேளை பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து இளைஞரை கைது செய்து சட்ட வைத்திய அதிகாரியிடம் சோதனைக்காக கொண்டு சென்ற போது இளைஞருக்கு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
இந்நிலையில் குறித்த இளைஞரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் பொலிஸாடம் தெரிவித்துள்ளனர். அத்துடன் 14 வயது சிறுமியை சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இளைஞரை கைது செய்து பொலிஸ் கண்காணிப்பில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்