இந்திய கப்பல் மீது தாக்குதல் ;அமெரிக்காவின் குற்றச்சாட்டை அடியோடு மறுக்கும் ஈரான்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ரசாயனம் ஏற்றி வந்துகொண்டிருந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டு ‘அடிப்படை ஆதாரமற்றது’ என ஈரான் மறுத்துள்ளது.
சவுதி அரேபியாவில் இருந்து ரசாயனம் ஏற்றிக்கொண்டு கெம் புளுட்டோ சரக்கு கப்பல் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. அது இந்திய பெருங்கடல் பகுதியில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே 200 கடல்மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது அதை நோக்கி பயங்கரவாதிகள், ‘ட்ரோன்’ வாயிலாக தாக்குதல் நடத்தினர். அதில் கப்பலின் மேல் தளத்தில் தீப்பற்றியது. கப்பலின் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தத் தாக்குதலில், அந்தக் கப்பலில் இருந்த, 21 இந்தியர்கள் உட்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கெம் புளுட்டோ கப்பலை தாக்கிய ‘ட்ரோன்’ ஈரானில் இருந்து ஏவப்பட்டது என அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. இந்தநிலையில் இந்த தாக்குதல் குறித்த கேள்விக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பதில் அளித்துள்ளார். தாங்கள் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என்றும், அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, அந்த தாக்குதலுக்கும் தங்கள் நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் இந்தியப் பெருங்கடலில் கப்பலைத் தாக்கியதாக பென்டகன் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு ஈரான் அதை மறுத்துள்ளது.