ரஷ்யாவின் போர்க்கப்பலை தகர்த்துவிட்டதாக உக்ரைன் உற்சாகம்
கிரீமியன் கடற்பரப்பிலிருந்த ரஷ்ய கடற்படையை சேர்ந்த கப்பல் ஒன்றை, செவ்வாய் அதிகாலை தங்களது விமானப்படை தகர்த்து அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் விமானப்படையின் தளபதி மைகோலா ஓலேஷ்சுக், டெலிகிராம் வாயிலாக இன்று வெளியிட்டிருக்கும் செய்தியில், கிரீமியாவின் ஃபியோடோசியா துறைமுகத்தில் நின்றிருந்த ரஷ்ய கடற்படை கப்பலை அதிகாலை 02:30 மணியளவில் உக்ரைனின் விமானப்படை தாக்கி அழித்ததாகவும், தாக்குதலுக்கு குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தியதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோவோசெர்காஸ்க் என்ற இந்த ரஷ்ய கப்பல் முற்றிலும் தகரக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளபோதும், அதனை நிரூபிக்கும் ஆவணங்கள் எதனையும் வெளியிடவில்லை. ஆனால் கிரீமியாவில் ரஷ்யாவால் நிறுவப்பட்டுள்ள கவர்னர் செர்ஜி அக்ஸியோனோவ், மறைமுகமாக இதனை உறுதி செய்துள்ளார். ஃபியோடோசியா துறைமுகத்தில் ’திடீர் தீ’ ஏற்பட்டதாகவும் பின்னர் அது போராடி அணைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சில தொழில்நுட்ப காரணங்களால் தற்போதைக்கு ஃபியோடோசியாவில் இருந்து ரயில்கள் புறப்படாது என்றும், சாலை போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளதாகவும் கிரீமியா கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஃபியோடோசியா துறைமுகத்தில் சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்திருப்பது மற்றும் அவை தொடர்பாக கட்டுக்கடங்கா தீ எழுந்திருப்பது குறித்து ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் வசமிருந்த கிரீமியாவை 2014-ல் ரஷ்யா ஆக்கிரமித்து, தனது ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளது. எனினும் ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சர்வதேச நாடுகள் இன்னமும் அங்கீகரிக்கவில்லை. சுமார் 69,000 மக்கள்தொகை கொண்ட ஃபியோடோசியா நகரம், கிரீமியன் தீபகற்பத்தின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இதன் துறைமுகத்திலிருந்த ரஷ்ய கப்பலை அழித்திருப்பதாக தற்போது உக்ரைன் தெரிவித்துள்ளது.
22 மாதங்களாக நீடிக்கும் ரஷ்யா – உக்ரைன் போரில், ரஷ்யாவின் வல்லாதிக்க தாக்குதலை மேற்கு நாடுகளின் உதவியோடு உக்ரைன் தடுத்து வருகிறது. உக்ரைனின் போர் நடவடிக்கைகளில் தடுப்பாட்ட வியூகங்களே பெருமளவு இடம்பிடித்துள்ளன. அரிதாகவே ரஷ்யா மீதான தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது. அந்த அரிதான நிகழ்வு தற்போதைய ரஷ்ய கடற்படை கப்பல் மீதான தாக்குதல் மூலமாக மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.