கோழி இறைச்சிக்கான இறக்குமதி வரியை இரத்து செய்யும் ரஷ்யா!
அடுத்த ஆண்டு முழுவதும் 140,000 டன்கள் வரை உறைந்த கோழி இறைச்சிக்கான இறக்குமதி வரியை ரஷ்யா ரத்து செய்யும் என்று ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்கவும், விலைகளைக் குறைக்கவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் மீண்டும் தேர்தலில் நிற்கும் ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த வாரம் ஒரு மாரத்தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கேள்வி-பதில் அமர்வின் போது முட்டை மற்றும் கோழியின் விலை உயர்ந்து வருவதாக புகார் அளித்த ஓய்வூதியதாரரிடம் மன்னிப்புக்கோரினார்.
இதனையடுத்தே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு 50% க்கும் அதிகமாக உயர்ந்துள்ள விலையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதற்காக அடுத்த ஆண்டு முதல் பாதியில் 1.2 பில்லியன் முட்டைகளுக்கு இறக்குமதி வரியிலிருந்து அரசாங்கம் விலக்கு அளித்துள்ளது.
டிசம்பர் 18 வரையிலான வாரத்தில் முட்டை விலை 4.62% மற்றும் அதற்கு முந்தைய வாரத்தில் 4.55% உயர்ந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.