பிரித்தானியா செல்ல முயன்ற பிரஜை ஒருவர் கட்டுநாயக்காவில் கைது!
இலங்கையில் இருந்து பிரித்தானியா செல்ல முற்பட்ட பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து ரிவோல்வர், 10 ரவைகள், ரம்போ ரக கத்தி மற்றும் 05 உயிருள்ள தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறான துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை வான்வழியாக எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், அவற்றை எடுத்துச் செல்வது அவசியமானால், இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சட்டப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும்.
இன்று பிற்பகல் 12.55க்கு இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-503 இல் 54 வயதுடைய பிரித்தானியப் பிரஜையான Parker Robert Michael கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அங்கு அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஸ்கேன் செய்த போது, இந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கண்டுபிடிக்க முடிந்தது.
அதன்படி, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று வந்து குறித்த பயணியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
பயணியிடம் விசாரணை நடத்தியபோது, இந்த ரிவால்வரை தனது பாட்டி தனக்கு ஒரு கலைப்பொருளாக பரிசளித்ததாக கூறினார்.
கைப்பற்றப்பட்ட பொருட்களை விசாரணைக்காக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன். பயணியை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.