ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்ல பிரித்தானியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு புதிய சட்டம்!
ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியப் பயணிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாட்டவர்களின் கைரேகைகள் மற்றும் முகத்தை ஸ்கேன் செய்யத் தொடங்கும் பணி ஆரம்பமாகும் என செய்தி வெளியாகியுள்ளது.
அடுத்த இலையுதிர்காலத்தில் இருந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
EES எனப்படும் புதிய நுழைவு/வெளியேறுத் திட்டம் பல தாமதங்களுக்குப் பிறகு 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி, முதல் நடைமுறைக்கு வரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது ஆரம்பத்தில் 2022ஆம் ஆண்டு தொடங்குவதாக இருந்தது, பின்னர் 2023 ஆம் ஆண்டிற்கு மாற்றப்பட்டது. இறுதியாக அடுத்த ஆண்டு அமுலாகவுள்ளது.
பல தாமதங்களைத் தொடர்ந்து, கோடையில் நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு புதிய முறையைத் தாமதப்படுத்துமாறு பிரான்ஸ் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செல்லும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத (பிரித்தானியர்கள் உட்பட) பயணிகளின் கைரேகைகள் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் ஐரோப்பிய வலையமைப்பிற்குள் நுழையும் போது அவர்களின் முகங்கள் ஸ்கேன் செய்யப்படும்.
சைப்ரஸ் மற்றும் அயர்லாந்து தவிர அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இது பொருந்தும்.
நோர்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகியவை ஷெங்கன் பகுதியில் உள்ளன, ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்ல என்பதனால் அந்த நாடுகளும் உள்வாங்கப்படும்.
புதிய நுழைவு/வெளியேறுத் திட்டத்தில் நபரின் பெயர், பயண ஆவணத்தின் வகை, பயோமெட்ரிக் தரவு மற்றும் நுழையும் மற்றும் வெளியேறும் திகதி மற்றும் இடம் ஆகியவற்றைப் பதிவு செய்யும்.
தரவு பாதுகாப்பு காரணங்களுக்காக சேகரிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தரவு அழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.