முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாடு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டு வரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன.
நீர்ப்பாசன குளங்களின் தற்போதைய நிலைமைகள், காலபோக பயிர்ச் செய்கை, துறை சார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதனைவிட நெற்செய்கையில் வெண்முதுகு தத்தி குறுகிய காலத்தில் கூடுதலான தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விளக்கமளித்திருந்தனர்.
வெண்முதுகு தத்தி பரவலுக்கு தொடர்ச்சியாக நீருள்ள வயல்களிலும், அதிக நிழல் மற்றும் அதிக சாரீரப்பதனுள்ள வயல்களிலும் ஏற்படுகின்றது, நெருக்கமான / தாவர அடர்த்தி கூடிய நைதரசன் பாவனையுள்ள பயிரின் ஆரம்ப வளர்ச்சி காலங்களில் அதிகூடிய பீடைநாசினி பாவனை முதலானவை சுட்டிக்காட்டப்பட்டன.
முற்காப்பு நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் பயிரிடல் வயது குறைந்த நெல் வர்க்கங்களை பயிரிடல், சரியான நில பண்படுத்துதல், வெண்முதுகு தத்திக்கு எதிர்ப்பு தன்மையுடைய நெல் இனங்களை பயிரிடல், தேவையற்ற பீடை நாசினி பாவனையினை தவிர்த்தல் , சிபார்சு செய்யப்பட்ட அளவிலான பசளை செய்கை, தேவையானளவு கூட்டெருவினை உபயோகித்தல், நேரத்திற்கு நேரம் நீரினை வடியவிடுதல் போன்ற நடவடிக்கைகள் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், திட்டமிடல் பணிப்பாளர் க.ஜெயபவானி, முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள உதவி பணிப்பாளர் லிகிர்தன், மாவட்ட விவசாய பணிப்பாளர் ஜாமினி சுசீலன், திருநெல்வேலி ஆராய்ச்சி பிரிவின் உதவி பணிப்பாளர் விரிவுரையாளர் ராஜேஸ்கண்ணா, பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாய சம்மேளனங்களின் அங்கத்தவர்கள், மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.