ரயிலில் சிக்கி தவித்த கர்ப்பிணி… ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அந்த ரயிலில் சுமார் 800 பயணிகள் இருந்தனர்.ஆனால், கனமழை காரணமாக அந்த ரயிலானது பாதிவழியிலேயே நிறுத்தப்பட்டது. பயணிகள் ரயில் கனமழைக்கு நடுவே பாதியிலேயே நிறுத்தப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்த பயணிகள் நிலை குறித்து கவலை எழுந்தது.
இதையடுத்து, ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக நேற்று 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள் மற்றும் 2 வேன்கள் மூலம் அருகில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகத்தினர் செய்து கொடுத்தனர்.
இதனிடையே, இந்த வழித்தடத்தில் உள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 500 பயணிகளை மீட்க முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து, ரயிலில் சிக்கியுள்ள 500 பயணிகளுக்குச் சாலை மார்க்கமாக உணவு கொடுக்க வழியில்லாத காரணத்தால், ஹெலிகாப்டர் மூலம் அவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.மேலும், மீதமுள்ள பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் இன்று மீட்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி. ரயிலில் சிக்கியவர்களை மீட்க, இன்று காலை மதுரையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது. ரயிலில் சிக்கி இருப்பவர்களுக்கு உணவு அளித்துவிட்டு பின்னர் அதே ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில், கனமழை காரணமாக சென்னை நோக்கி வந்த ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அருகே சுமார் 36 மணி நேரமாக ரயிலில் சிக்கி இருப்பவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதன்பிறகு, முதற்கட்டமாக ரயிலில் சிக்கி உள்ள மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
ரயிலில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் உட்பட பலர் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட பின் பயணிகள் சிறப்பு ரயில்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.ரயிலில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளது.