தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதி -இந்திய ஏஜெண்டுகள் மீது சந்தேகம்
நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் உணவில் விஷம் கலக்கப்பட்டதால், அவர் பாகிஸ்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகிறது.
1993, மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட நபர் தாவூத் இப்ராஹிம். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI மற்றும் சில பயங்கரவாத அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து இந்த கோர சம்பவத்தை அவர் நிகழ்த்தியிருந்தார். அதற்கு முன்னரும், பின்னருமாக மும்பையை ஆட்டிப்படைக்கும் போதை, ஆயுதம் மற்றும் ஆட்கடத்தல்களிலும், நிலபேரங்கள், பாலிவுட் சினிமா உலகின் நட்சத்திரங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் என பலவற்றின் பின்னணியில் ’டி கேங்’ என்ற பெயரில் தாவூத் இப்ராஹிம் ஆட்கள் இருந்தனர்.
மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின்னர் வளைகுடா நாடுகளுக்கு தப்பிச் சென்ற தாவூத் இப்ராஹிம் பின்னர் பாகிஸ்தானில் அடைக்கலமானார். அங்கிருந்தபடி இந்தியாவின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் சதித் திட்டங்கள் முதல், மும்பை நிழலுலகை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவது வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். கராச்சியில் மணமுடித்து அங்கேயே தலைமறைவு வாழ்க்கையை நடத்தி வந்தார்.
இந்த சூழலில், இந்தியாவுக்கு எதிரான மற்றும் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்தியவர்கள் மற்றும் அதற்கு மூளையாக செயல்பட்ட நபர்கள், பாகிஸ்தானில் மர்ம நபர்களால் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகின்றனர். இதன் பின்னணியில் இந்தியாவின் ரகசிய ஏஜெண்டுகள் இருப்பதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இப்படி கொலையாவோர் வரிசையில் தாவூத் இப்ராஹிமுக்கும் குறி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஊகங்கள் வெளியாயின.
இதற்கிடையே கராச்சி மருத்துவமனை ஒன்றில் தாவூத் இப்ராஹிம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் அவரது உறவினர்கள் வாயிலாக வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது. விஷம் கலந்த உணவை சாப்பிட்ட காரணத்தில் தாவூத் இப்ராஹிம் உடல்நிலை கவலைக்கிடமானதாகவும், அதனையொட்டி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னணியில் இந்திய ஏஜெண்டுகள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட நபர்கள் இருக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தான் மட்டுமன்றி, கனடா மற்றும் அமெரிக்காவிலும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் மீது இந்திய ஏஜெண்டுகள் கொலை சதியை மேற்கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.