சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசின் மகிழ்ச்சியான தகவல்
நிதியமைச்சின் கீழ் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உத்தரவாதம் வழங்கும் நிறுவனம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தில் 50 வீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவது, பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள இவ்வேளையில் அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாகக் கருதப்படுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
2024 வரவு செலவுத் திட்டத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 30 பில்லியன் ரூபாவை கடன் திட்டங்களுக்கு பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்காக செயற்பாட்டு மூலதனம் வழங்குதல் உள்ளிட்ட 11 வெவ்வேறு நிவாரணத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.