ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இலகுபடுத்தப்படும் – கல்வி அமைச்சு
பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த வருடம் இலகுபடுத்தப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் எழுத்தறிவு மற்றும் எண்ணிக்கையை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
எதிர்காலத்தில் புலமைப்பரிசில் சித்திகளைப் போன்று 4ஆம் மற்றும் 5ஆம் தர வகுப்பறையில் முப்பது வீதமான புள்ளிகளைப் பெற வேண்டும் எனவும், அதற்காக பிள்ளைகள் தொடர்ச்சியாக பாடசாலைக்குச் செல்வது அவசியம் எனவும் திரு.பிரேமஜயந்த குறிப்பிட்டார்.
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பல முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த முன்மொழிவுகள் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சை சிக்கலானது பிள்ளைகளின் மனதில் பெரும் சுமையாக இருப்பதாக கல்வியாளர்களும் மனநல நிபுணர்களும் நீண்டகாலமாக அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இதேவேளை, அடுத்த வருடம் கல்வியில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.