ஆந்திராவில் பில்லி, சூனியம் ஏன்ற போர்வையில் 21 பேரின் தலைகளை துண்டித்த மந்திரவாதி…!
ஒருங்கிணைந்த ஆந்திராவின் மக்கள் ஒரு மந்திரவாதி குறித்து பரபரப்பாக விவாதித்து வருகின்றனர். பில்லி, சூனியம், வசியம் உள்ளிட்டவற்றின் பெயரால் 21 பணக்காரர்களிடம் கொள்ளையடித்த பின்னர், அவர்களின் தலையைத் துண்டித்து கொன்றிருக்கும் சத்யம் என்ற மந்திரவாதியை ஒருவழியாக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் சத்யம். 42 வயதாகும் இவர் தன்னை ஒரு மந்திரவாதியாகவும், பில்லி, சூனியம் போக்கும் நபராகவும் பணக்காரர்களிடம் அறிமுகமாகிறார். தான் நடத்தும் மாந்திரிக பூஜையால் திடீர் அதிர்ஷ்டம், அழகான பெண்களின் சகவாசம், கூடுதல் சொத்துக்கள், எதிரிகளின் பில்லி, சூனியம் போக்குதல் உள்ளிட்ட உத்தரவாதங்களை சத்யம் அள்ளி விடுகிறார். அவற்றை நம்பும் நபர்களில் ஏமாளியாகவும், பசையுள்ளவராகவும் வடிகட்டி, அடுத்த சுற்றுக்கு சத்யம் அடிபோடுகிறார். சில மாதங்களுக்குப் பின்னர் அந்த பணக்காரர் திடீரென காணாமல் போய்விடுகிறார்.
இப்படி ஹைதராபாத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் திடீரென மாயமானபோது, அரசியல் பின்னணி கொண்ட அவரது மாமனார் வீடு பொலிஸில் புகார் செய்ததோடு, காவல்துறை விசாரணைக்கு கூடுதல் அழுத்தம் தந்தது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஊடுருவிய தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டன. அப்படித்தான் மந்திரவாதி சத்யாவுடன் ரியல் எஸ்டேட் அதிபர் தொடர்பு கொண்டிருந்தது வெளிப்பட்டது.
இதனையடுத்து அப்பாவி பக்தர் வேடத்தில் மந்திரவாதியை பொலிஸார் நெருங்கி விசாரித்ததில், அவரது இருண்ட மறுபக்கம் தெரிய வந்தது. உடனே மந்திரவாதியை கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ரியல் எஸ்டேட் அதிபரிடமிருந்து பணம் மற்றும் நகைகளை பறித்த பின்னர் அவரது கழுத்தை நெறித்து மந்திரவாதி கொன்றது விசாரணையில் வெளிப்பட்டது.
அப்போதுதான் சத்யம் மீது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெவ்வேறு அடையாளங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. மாந்திரீகத்தின் பெயரில் தன்னிடம் வருபவர்களின் நம்பிக்கையை பெறும் சத்யம், பின்னர் பூஜைகள், மந்திரங்கள் ஆகியவற்றின் பெயரில் பணம், நகைகளை சமர்பிக்கச் சொல்கிறார். அவர்களும் நம்பி அவற்றை மந்திரவாதியிடம் வழங்க, அவற்றை அபகரிக்கும் முயற்சியில் பூஜை முடிந்ததும் அந்த அப்பாவிகளின் தலையைத் துண்டித்து கொன்று விடுவதை சத்யம் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த வகையில் இதுவரை 21 பேரை சத்யம் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவின் வனபர்த்தி மாவட்டம் நாகபூர் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், குடும்ப பிரச்சனையை தீர்க்க மந்திரவாதியிடம் வந்தனர். அந்த 4 பேரையும் மாந்திரீக பூஜையின் பெயரில் தனித்தனியாக தலையை வெட்டி கொன்றதாக மந்திரவாதி சத்யம் தெரிவித்ததில் பொலிஸாரே அதிர்ந்து போயுள்ளனர். .
தலைகள் துண்டிக்கப்பட்டு கொலையானவர்கள் புதைக்கப்பட்டனரா அல்லது எரிக்கப்பட்டனரா என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை. அதற்கு மட்டும் சத்யம் வாய் திறக்காததில், இந்த விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்றும், நரபலி போன்ற விவகாரங்கள் இதில் புதைந்திருக்கக் கூடும் என்றும் பொலிஸார் கணித்துள்ளனர்.மேலும் மந்திரவாதி கொன்ற நபர்களின் எண்ணிக்கை 21க்கும் அதிகமாக இருக்கும் என்றும் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து ஒருங்கிணைந்த ஆந்திராவில் பதற்றம் தொற்றியுள்ளது. 2 மாநிலங்களிலும் கடந்த சில ஆண்டுகளில் காணாமல் போன நபர்களின் விவரங்களை சேகரித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.