திருகோணமலையில் மக்கள் நலன் கருதி சுற்றுலா நீதிமன்றம் திறந்து வைப்பு
திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ மற்றும் கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் நலன் கருதி இன்று (12) மொரவெவயில் சுற்றுலா நீதிமன்றம் உத்தியோபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லா தலைமையில் ஆரம்பிக்கப் பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக இதுவரை காலமும் ஜம்பதுக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருகோணமலை நகர் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் காலை செல்லக்கூடிய பஸ் விடுபட்டால் அன்றைய தினம் வழக்குகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தற்போது 100 ரூபாய் செலவில் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும் எனவும் அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
வாரத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மொரவெவ சுற்றுலா நீதிமன்றம் இடம்பெறும் எனவும் திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியொருவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை பிரதான நீதவான் பயாஸ் ரஸ்ஸாக், மற்றும் மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி , மாவட்ட நீதிபதி எம்.கணேஷராஜா உட்பட சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.