ரிஷி சுனக்கின் ஒரு வார விமான பயணத்திற்கு 5.07 கோடி செலவு; எதிர்க்கட்சியினர் கண்டனம்
இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டில் அவர், ஒரு வாரத்தில் மேற்கொண்ட விமான பயணத்திற்கு ரூ.5.07 கோடி வரை செலவாகி உள்ளது என தெரிய வந்து உள்ளது.
அவர் தனியார் ஜெட் விமானத்தில் பயணித்ததில், மக்களின் வரிப்பணம் வீணாகி விட்டது என அந்நாட்டில் இருந்து வெளிவரும் தி கார்டியன் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. பிரதமர்களில் பெரிய பணக்காரராக திகழும் சுனக்கிற்கு, இந்த செலவால் எதிர்க்கட்சிகளின் கண்டனம் அதிகரித்து உள்ளது.
கடந்த ஆண்டு எகிப்தில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தனியார் ஜெட் விமானத்தில் நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் சென்று, திரும்பிய வகையில் ரூ.1.09 கோடி செலவு ஏற்பட்டு உள்ளது. ஒரு வாரம் கழித்து, பாலியில் நடந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்க நவம்பர் 17ம் திகதி சுற்றுப்பயணம் மேற்கொண்டதில், ரூ.3.44 கோடி செலவு ஏற்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் லட்வியா மற்றும் எஸ்தோனியா நாடுகளுக்கு படைகளை பார்வையிட சென்றதில், ரூ.62.90 லட்சத்திற்கும் கூடுதலாக செலவிடப்பட்டு உள்ளது.
இதுதவிர தங்குமிடம், சாப்பாடு மற்றும் விசா உள்பட பிற செலவினங்கள் என மொத்தம் ரூ.20.29 லட்சம் செலவாகி உள்ளது. இந்த செலவில் உடன் சென்ற அதிகாரிகளுக்கான செலவுகள் சேர்க்கப்படவில்லை. லிஸ் டிரஸ் பிரதமரானபோது, அவருடன் பிரேக்கிற்கு 19 பேர் கொண்ட குழுவினர் சென்றனர். எனினும், பாலியில் சுனக்குடன் 35 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இணைந்து கொண்டது. இதனை அந்நாட்டு அமைச்சரவை அலுவலக ஆவணம் தெரிவிக்கின்றது என தி கார்டியன் தெரிவித்து உள்ளது.