யாழ் மாவட்ட செயலகம் முன்பு மனித உரிமை கவனயீரப்புப் போராட்டம்!
மனித உரிமைகளை வலியுறுத்தி வடமாகாண சமுகமட்ட அமைப்புக்களால், கீழ்வரும் 8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீரப்புப் போராட்டம் இன்று (11) முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் 75 ஆவது உலக மனித உரிமைகள் நாளை (12) முன்னிட்டு குறித்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்குதல், கொக்கிளாய் மனித புதைகுழிக்கு நீதியான விரைவான விசாரணையை முன்னெடுத்தல், மனித சித்திரவதைகளை நிறுத்துதல், பெண்களுக்கெதிரான வன்முறையை நிறுத்துதல்,
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறலை விரைவுபடுத்துதல், பூநகரிப் பிரதேசத்தில் பொன்னாவெளிப் பகுதியில் சுண்ணக்கல் அகழ்வையும், சீமெந்து தொழிற்சாலை அமைப்பதையும் உடன் நிறுத்துதல், மன்னார்தீவில் கனியமண் அகழ்வை உடன் நிறுத்துதல்,மன்னார்தீவில் காற்றாலை மின்சாரத்தை அமைக்காது, அதனை வேறுபகுதிக்கு மாற்றுதல் என எட்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.