ஜப்பானில் கடற்கரையில் லட்சக்கணக்கில் செத்து மிதந்த மீன்கள்… உலக நாடுகள் அதிர்ச்சி!
வடக்கு ஜப்பான் ஹொக்காய்டோ தீவு பகுதியில் உள்ள ஹகோடேட் கடல் பகுதியில், திடீரென லட்சக்கணக்கான மீன்கள் இறந்தன. இதனால் கடற்கரை முழுவதும் மீன்கள் மயமாக காட்சியளித்தது. இது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழன் அன்று ஜப்பானின் வடக்கே பிரதான தீவான ஹொக்கைடோவில் உள்ள ஹகோடேட்டில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கின. சுமார் அரை மைல் நீளமுள்ள கடற்கரையில் உள்ளூர்வாசிகள் செத்து மிதந்த மீன்களைச் சேகரித்துச் சென்றனர். எனினும் அவற்றை சாப்பிட வேண்டாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.
திடீரென இவ்வளவு மீன்கள் இறந்ததற்கான காரணம் தெரியாமல் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். விசாரணையில் ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து கதிர்வீச்சு கலந்த தண்ணீர் கடலில் கலக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவாக இருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே, சம்பவ இடத்துக்கு சென்ற மீன் ஆராய்ச்சியாளர்கள் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆய்வு முடிவு வெளியான பிறகே, மீன்களின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். கடந்த அக்டோபர் மாதம் ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து கழிவுநீர் கடலில் கலக்கப்பட்டது. இந்த நிலையில் அணு உலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கு அது பிரச்சினையான ஒன்றுதான். அதனால் அணு உலைகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் இது பிரச்சினைக்குரிய விஷயம் என்பதால் அனைத்து நாடுகளுமே கருத்தில் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.