சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று : மட்டக்களப்பிலும் மாபெரும் போராட்டம்!
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று (10.12) பிற்பகல் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் மனித உரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக நடைபெறும் மனித உரிமை மீறல்களை வன்மையாக கண்டிக்கின்றோம் என்னும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மதத்தலைவர்கள்,அரசியல்வாதிகள்,மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மனித உரிமைகள் தொடர்பான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் தற்போதைய நிலையில் காணப்படும் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
அண்மையில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வினை தொடர்ந்து பொலிஸார் மிக மோசமான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி அப்பாவி மக்களை கைதுசெய்துவருவதுடன் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சுதந்திரத்தினையும் மறுத்துவருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் தமது மேய்ச்சல் தரை உரிமைக்காக இதுவரையில் 154 மாடுகள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படும் நிலையில் பொலிஸார் பக்கச்சார்பாக நடப்பதாகவும் அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களினால் தெரிவிக்கப்பட்டது.
வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இதுவரையில் நீதி கிடைக்காத நிலையில் சர்வதேச நீதியை கோரியுள்ள நிலையில் அதனையே இன்று தாங்களும் வலியுறுத்திவருவதாகவும் இலங்கையின் நீதித்துறையில் தமிழர்கள் நம்பிக்கையிழந்து காணப்படும் நிலையில் சர்வதேச சமூகம் அதற்கு ஆதரவாக குரல்கொடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.