தான்சானியாவில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு – 63 பேர் உயிரிழந்த சோகம்!
தான்சானியா நாட்டில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 63 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தான்சானியா, சோமாலியா, எத்தியோபியா, தெற்கு சூடான், கென்யா ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வழக்கமாக வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கும் இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அந்நாடுகளின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக சோமாலியா, தெற்கு சூடானில் மக்கள் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி உள்நாட்டிலேயே அகதிகளாக இடம்பெயரும் அவலம் நிலவி வருகிறது.
இதில் ஓரளவிற்கு செழிப்பாக உள்ள தான்சானியாவில் அக்கண்டத்தின் உயரமான ஹனாங் மலை அமைந்துள்ளது. இந்த மலையின் அருகில் ஏற்பட்ட வெள்ளத்தால், அப்பகுதியில் இருந்த வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 63 பேர் உயிரிழந்துள்ளதோடு, 116 பேர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் காசிம் மஜலிவா தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான மக்களை மீட்க ராணுவமும், மீட்புக் குழுவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இருந்தும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் சிக்கல்கள் உள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே துபாயில் நடந்த ஐநா காலநிலை மாநாட்டில் கலந்து கொண்ட அதிபர் சாமியா சுலுஹு ஹசன், உடனடியாக தான்சானியாவுக்கு திரும்புவதற்காக அறிவித்துள்ளார்.
அவர் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள் மீட்புப் பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.