பிரபல நாடக நடிகர் சுமிந்த சிறிசேன மறைவு… திரையுலகினர் அஞ்சலி!
இலங்கையின் பிரபல திரைப்பட மற்றும் நாடக நடிகர் சுமிந்த சிறிசேன நேற்று காலமானார். அவருக்கு வயது 75.
இலங்கை திரையுலகின் முன்னோடியான நாடகக் கலையில் கோலோச்சிய பலரில் முக்கியமானவர் நடிகர் சுமிந்த சிறிசேன. ரயில்வேயில் பணியாளராக வாழ்கையைத் தொடங்கிய அவர், வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு திரும்பிய பின்னர் பல்வேறு நாடகங்களில் நடித்து வந்தார். குறிப்பாக அவர் நடித்த ’ரங்க சில்ப சாலிக’ என்ற நாடகம் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தது.
இதையடுத்து, பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றி நடித்துள்ள சுமிந்த, தேசிய விருதுகள், சர்வதேச விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இலங்கை அரசின் தொலைக்காட்சியான ரூபவாஹினியில் அவர் நடித்த தொலைக்காட்சி தொடர்கள், இன்றும் அவரை மக்களிடையே நினைவில் வைத்திருகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அதன் பின்னர் உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்பில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவிற்கு திரைபிரபலங்கள் மற்றும் திரைப்படத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இளவயதில் ஜனத விமுக்தி பெரமுனா அமைப்பின் ஆதரவாளராக இருந்த சுமிந்த, அந்த அமைப்பு ஆயுத கலாச்சாரத்தை கையில் எடுத்ததும், அதிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.