அமெரிக்காவில் ஆன்லைனில் துப்பாக்கி குடும்ப உறுப்பினர்களை சுட்டு கொன்ற இந்திய மாணவன்!
அமெரிக்காவில் தனது தாத்தா, பாட்டி, மாமா ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த இந்திய மாணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
குஜராத்தைச் சேர்ந்த ஓம் பிரம்பாத்(23) சில மாதங்களுக்குமுன்பு அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் குடியேறிய தனது பாட்டி வீட்டுக்குக் குடிபெயர்ந்துள்ளார். அந்த வீட்டில் ஓம் பிரம்பாத்தின் தாத்தா திலீப்குமார் பிரம்பாத்(72), பாட்டி பிந்து பிரம்பாத்(72), மாமா யஷ்குமார் பிரம்பாத்(38) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், திங்களன்று ஓம் பிரம்பாத் வீட்டில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.
இதன்பின் காவல் துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, 911 அவசர எண்ணை ஓம் பிரம்பாத் தான் அழைத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்து பார்த்த போது திலீப் குமார், பிந்து ஆகியோர் இரண்டாவது மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தனர். அவர்களது மகன் யஷ்குமார் துப்பாக்கிக் காயங்களுடன் படுகாயமடைந்து கிடந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ஓம் பிரம்பாத்திடம் ஸார், யார் துப்பாக்கியால் சுட்டது எனக் கேட்டதற்கு, அது நானாக இருக்கலாம் எனக் கூறியுள்ளார். இதனால் அவரைக் கைது செய்த பொலிஸார், அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைத்துப்பாக்கியை ஆன்லைனில் வாங்கியதாக கூறியுள்ளார். நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் அல்லது மிடில்செக்ஸ் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகத்தை அணுகுமாறு காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். எதற்காக மூன்று பேரை மாணவர் சுட்டுக்கொலை செய்தார் என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.