யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் பொறித்த ஆடை அணிந்த சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரை டிசம்பர் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாட்டில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் நேற்று கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத தடுப்பு விதிகளின் கீழும் குறித்த இளைஞன் மீது பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, ”குறித்த நபர் குற்ற மனப்பான்மையுடன் குறித்த செயலை செய்யவில்லை என்றும் விநோதமான முறையில் இதனை செய்துள்ளார். இது தேசிய பாதுகாப்புக்கு சவால் விடும் வகையில் செய்யவில்லை.குற்ற மனப்பான்மையுடன் செய்யாத குறித்த செயலுக்கு பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வது நீதவானுக்கே பிணை வழங்க முடியாது போகலாம்.
பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள அவகாசம் தேவை எனில் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்து குறித்த செயலில் தீய எண்ணம் இல்லை என்ற உண்மையை அறியலாம்” என்றார்.
சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொள்ள பொலிஸார் மேலும் கால அவகாசம் கோரிய நிலையில் சம்பவம் தொடர்பான விரைவில் பூரண விசாரணைகளை மேற்கொண்டு முழுமையான விசாரணை அறிக்கையை வழக்கின் அடுத்த தவணையின்போது சமர்பிக்க பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
வழக்கை விசாரித்த சாவகச்சேரி நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் சந்தேக நபரை டிசம்பர் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.