திருச்சியில் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சடலம் – உயிருடன் எழுந்து அதிர்ச்சி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கண்ணூத்து அருகேயுள்ள பொன்னம்பட்டியை சேர்ந்தவர் காமநாயக்கர் மகன் 23 வயதான ஆண்டி நாயக்கர்.
கடந்த 4நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த ஆண்டி நாயக்கர் உர மருந்தை அருந்தியுள்ளார். அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற போதிய பொருளாதாரம் இல்லை எனக்கூறிய காமநாயக்கர், தன் மகனை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வகையில் மாற்றம் செய்து தர வலியுறுத்தியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் செயற்கை சுவாச கருவிகளுடன் ஆண்டி நாயக்கரை அனுப்பி வைத்துள்ளது.
ஆனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விரும்பாத காமநாயக்கர், தனது பொன்னம்பட்டி வீட்டிற்கு தன் மகனை அழைத்து சென்றுள்ளார்.
அங்கு ஆம்புலன்ஸிலிருந்து இறக்கப்பட்ட ஆண்டி நாயக்கர் எந்தவித அசைவுமின்றி இருந்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட காமநாயக்கர் உள்ளிட்ட உடனிருந்தவர்கள் ஆண்டிநாயக்கர் உயிரிழந்துவிட்டதாக நினைத்து மயான பகுதியிலேயே ஆண்டிநாயக்கரை வைத்துக்கொண்டு கதறி அழுத்துள்ளனர்.
அப்போது ஆண்டிநாயக்கர் மூச்சுவிட்டு கண் விழித்தால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மீண்டும் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து ஆண்டிநாயக்கரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மயானத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் உயிருடன் திரும்பிய செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.