உலகக்கோப்பை மீது கால்வைத்து போஸ் கொடுத்த ஆஸ்திரேலிய வீரருக்கு எதிராக வழக்கு பதிவு
ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக் கோப்பை மீது கால் வைத்து போஸ் கொடுத்ததற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட தடை அவருக்கு விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி கடந்த 19ம் திகதியுடன் முடிவடைந்தது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் அதிரடியால் 43 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இதையடுத்து உலகக் கோப்பையுடன் ஆஸ்திரேலியா வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தனித்தனியாக டிராபியுடன் போஸ் கொடுத்தனர். ஆனால், மிட்செல் மார்ஷ் மட்டும் ஒருபடி மேல் சென்று டிராபி மீது கால் வைத்து இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் மிட்செல் மார்ஷின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தான் மிட்செல் மார்ஷ் மீது உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது செயல் இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அலிகாரைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் பண்டிட் கேசவ் என்பவர் மிட்செல் மார்ஷ் மீது புகார் அளித்துள்ளார். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, மார்ஷை இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதைத் தடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே தனது சொந்த ஊருக்கு வந்த இந்திய வீரர் முகமது ஷமி, உலகில் உள்ள அனைத்து அணிகளும் போராடும் ஒரு டிராபிக்கு, மிட்செல் மார்ஷ் செய்த இந்த செயல் மகிழ்ச்சி அளிக்கவில்லை. காயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருந்து குறிப்பிடத்தக்கது.