மதுபோதையில் பொலிஸார், பொதுமக்கள் மீது தாக்குதல்… சென்னையில் அமெரிக்க இளைஞர்கள் அட்டகாசம்
சென்னையில் காவலர்கள், பொதுமக்கள் என அனைவரையும் மதுபோதையில் நடுரோட்டில் அமெரிக்க இளைஞர்கள் துரத்தி துரத்தி தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு இரண்டு அமெரிக்க இளைஞர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது போதை தலைக்கேறி இருவரும் ஓட்டலில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டல் நிர்வாகம் இரண்டு இளைஞர்களையும் பவுன்சர்கள் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ஆட்டோவில் வந்த அமெரிக்க இளைஞர்களில் ஒருவர் திடீரென ஜெமினி சிக்னலில் ஆட்டோவில் இருந்து வெளியே குதித்து சாலையில் நடந்து சென்றவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் என அனைவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இதில் கோபமடைந்த பொதுமக்கள் சிலர் பதிலுக்கு அந்த அமெரிக்க இளைஞரை அடித்து சாலையோரம் உட்கார வைத்து பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த அமெரிக்க இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸில் ஏற்ற முற்பட்டபோது மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் வெறிபிடித்தது போல் கூச்சலிட்டு மீண்டும் அங்கிருந்த காவல் ஆய்வாளர், காவலர்கள், பொதுமக்கள், என அனைவரையும் துரத்தி துரத்தி தாக்கினார். இதனைப் பார்த்த அவ்வழியாக சென்ற இளைஞர்கள் சிலர் காவலர்களின் உதவியோடு அந்த இளைஞரை மடக்கி பிடித்து கைகளை கட்டி பொலிஸ் வாகனத்தில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஆயிரம் விளக்கு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் அமெரிக்கா கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த அலெக்ஸ் மற்றும் மெல்கார் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்டு அளவுக்கு அதிகமான மது அருந்தியதும், பின்னர் போதை தலைக்கேறி இவ்வாறு நடந்து கொண்டதும் தெரியவந்தது.
அமெரிக்க இளைஞர் மதுபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.