மனிதச்சங்கிலி போராட்டத்தின் அர்த்தத்தினை சில அரசியல்வாதிகள் கொச்சைப்படுத்தி விட்டார்கள்: பொ.ஐங்கரநேசன்
அகிம்சை ரீதியான போராட்டங்களில் மிகவும் வலுவான போராட்டமான மனிதச்சங்கிலி போராட்டத்தின் அர்த்தத்தினை சில அரசியல்வாதிகள் கொச்சைப்படுத்தி விட்டார்கள் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற கார்த்திகை வாசம் மலர் கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் எமது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது.
அதற்கு பின்னர் நாம் இனி துப்பாக்கி தூக்கி போராடக்கூடிய நிலைமையில் இல்லை, ஆனால் அதற்கு ஒத்ததாக அகிம்சை ரீதியாக போராட முடியும். ஆனால் அதனை தலைமை தாங்குவதற்கு தலைமையேற்பதற்கு யாரும் இல்லை, மக்களை சரியாக வழிபடுத்தவும் ஒழுங்கான தலைமை இல்லை, உதாரணமாக நான் ஒன்றை கூற விரும்புகின்றேன் அண்மையில் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் மனித சங்கிலி போராட்டம் என மருதனார்மடம் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் வரை மனித சங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு விட்டார்கள். ஆனால் அதில் கட்சி ஆதரவாளர்கள் கூட பங்குபற்ற வில்லை, வீதியால் சென்றவர்கள் அந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கு பற்றியிருந்தாலேயே யாழ்ப்பாணம் வரைக்கும் அந்த மனித சங்கிலி போராட்டம் நீண்டிருக்கும். ஆனால் விதியால் சென்றவர்களும் பார்வையாளர்களாகவே சென்றதன் காரணமாக அந்த போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டு மனித சங்கிலி போராட்டம் தோல்வி அடைந்துள்ளது.
எமது அஹிம்சை ரீதியான போராட்டமும் சரி ஏனைய போராட்டங்கள் என்றாலும் அதனை செயற்படுத்துவதற்கு ஒழுங்கான தலைமைத்துவம் இல்லை இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு விட்டவர்கள் அதனை ஒழுங்கான முறையில் செயற்படுத்தவில்லை என்றே கூறலாம்.
நான் ஏற்கனவே குறிப்பிட்ட விடயம் ஒன்றினை குறிப்பிட விரும்புகின்றேன், காலையில் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்த ஒருவர் 11 மணியளவில் கல்வியக்காடு சந்தையில் மீன் வாங்க நிற்கின்றார் போராட்ட முடிவு நேரத்தில் அவரை உண்ணாவிரத பந்தலில் கண்டேன் இப்படியான தலைவர்கள் இருக்கும் நிலையில் எமது போராட்டங்கள் எவ்வாறு வெற்றியடையும்?
எமது மாவீரர்களின் வரலாறுகளை எதிர்கால சந்ததியினருக்கு இந்த மரநடுகை மாதத்தின் மூலமாவது கடத்த வேண்டும்.
நாங்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு மரம் நடுவோம் கட்டாயமாக அது ஒரு நல்ல பயனைத் தரும் எனினும் எமது எதிர்கால சந்ததியினர் தற்பொழுது வெவ்வேறு துறைகளில் மோகம் கொண்டுள்ளார்கள். குறிப்பாக தென்னிந்திய சினிமா மற்றும் தென்னிந்திய கலைஞர்களை இங்கே கொண்டு வந்து கொண்டாடுதல் போன்ற பல்வேறு துறைகளில் மோகம் கொண்டுள்ளார்கள். அவ்வாறான எதிர்கால சந்ததியினருக்கு எமது கடந்த கால வரலாறுகளை கடத்துவதற்கு இந்த மரநடுகை மாதமானது ஒரு உதாரணமாக காணப்படுகிறது.
மர நடுகை மாதமானது கார்த்திகை மாதம் தான் செயற்படுத்தப்படுகின்றது அதேபோல எமது இனத்துக்காக போராடி மடிந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளும் கார்த்திகை மாதத்தில் தான் இடம்பெறுகின்றது,
எனவே இந்த மரநடுகை மாதத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு எமது கடந்த கால வரலாறுகளை கடத்துவதற்கு இலகுவாக இருக்கும்” எனவும் தெரிவித்தார்.