போலிக் கடிதம் கேட்டு மிரட்டிய வட்டுக்கோட்டை பொலிஸார்…
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் நிலவரங்களை பார்வையிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் காட்டுமிராண்டித்தனமான கொலை ஒன்று அரங்கேறியிருப்பதை என்னால் உணர முடிகிறது என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனையும் அவரது நண்பரையும் பொலிஸார் காரணமில்லாமல் கைது செய்து சட்டத்திற்கு முரணாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாக்குதல் நடாத்தியிருக்கிறார்கள்.அவர்களுக்கு உரிய முறையில் வைத்திய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. பின்னர் இந்த விடயங்களை வெளியே சொல்ல வேண்டாம் என அச்சுறுத்தி உள்ளார்கள். அது மாத்திரமில்லாமல் அந்த அச்சுறுத்தலின் விளைவாக தற்போது இளைஞன் உயிரிழந்துள்ளார்.
அவரோடு கைதுசெய்யப்பட்ட மற்றைய இளைஞரும் சிறைச்சாலையில் இருக்கின்றார். அவருக்கும் காயங்கள் காணப்படுகிறது. அவரது குடும்பத்திடம் சென்று பொலிஸார் தாங்கள் அவரை தாக்கவில்லை என கடிதம் தருமாறு அச்சுறுத்தியிருக்கின்றார்கள்.
இந்த விடயங்களை நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவர இருக்கின்றோம். இந்த இடத்தில் பாரிய ஒரு அச்சுறுத்தல் நிலவுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாரிய ஒரு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுகிறது.
இங்கே குற்றம் இழைத்ததும் பொலிஸார். அந்த குற்றத்தை விசாரிக்க போவதும் அவர்களே தான். ஊடகங்கள் இந்த வழக்கிற்கு முழுமையான ஆதரவை தர வேண்டும். அல்லது இந்த வழக்கின் உண்மைகள் குழி தோண்டி புதைக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.